எதிர்ப்பைத் தெரிவிக்க சமீபத்தில் மிகவும் பிரபலமான வழியாக இது கருதப்படுகிறது! பொதுவாக, நாம் கடுங்கோபத்தில் இருக்கும்போது, எதிராளியைப் பார்த்து "செருப்பால் அடிப்பேன்" என்று கூறுவது சகஜம் தான் என்றாலும், செருப்பை முன் வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை (காலில் போட்டுக் கொண்டு நடை பயில்வதை விடுத்து!) எதிராளிக்கு அவமானம் தரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. அதனால் தான், பெரியார் பக்தர்கள், கடவுளர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, நாத்திகத்தை பரப்ப (அல்லது மூட நம்பிக்கைகளை ஒழிக்க - இப்படிக் கூறவில்லை என்றால், பெரியார் வாரிசுகள் என்னை கும்மி விடுவார்கள் :)) முயற்சித்தார்கள்! அதனால், ஆத்திகமும், ஆன்மீகமும் வேக வேகமாக வளர்ந்தன என்பது இந்த தலைப்புக்குச் சம்பந்தமில்லாத ஒன்று!
அது போல, பிடிக்காத ஒருவரின் (எ.கா:ஹிட்லர் ராஜபக்ஷே!) உருவ பொம்மையை எரிப்பதற்கு முன்னால், அதற்கு செருப்பு மாலை அணிவித்து அழகு பார்ப்பதும் நாம் அனுசரிக்கும் ஒன்று தான்! எப்படி கற்களை குறி பார்த்து வீசுவதில் வழக்கறிஞர்கள் திறமைசாலிகளாக விளங்குகிறார்களோ, இந்த செருப்பு வீசுவதில், பத்திரிகையாளர்களும், மாணவர்களும் முன்னணியில் இருக்கிறார்கள். அதனால், குறி பார்த்து செருப்பு வீசுவதில் நல்ல திறமை பெற விரும்புபவர்கள் இவர்களை நாடி பயிற்சி பெறுவது அவசியமாகிறது. மீடியாவைத் தாக்கி எழுதும் புண்ணியவான்கள் (என்னையும் சேர்த்து) சற்று உஷாராக இருப்பது, அவர்கள் உடம்புக்கு நல்லது!
செருப்பு வீசுவதன் வாயிலாக, வீசுபவருக்கு 15 நிமிடப் புகழ் உடனடியாக கிடைத்து விடுகிறது என்றாலும், சில சமயங்களில் "தர்ம அடி" கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது போல, ஒற்றைச் செருப்போடு காவலர்களால் தரதரவென இழுத்துச் செல்லப்படும் அசௌகரியத்தையும் அவமானத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மிச்சமிருக்கும் ஒத்தைச் செருப்பை பயன்படுத்தவும் இயலாது!
அதனால் தான், இராக்கில் ஜார்ஜ் புஷ் மீது செருப்பெறிந்த இராக்கிய பத்திரிகையாளர், தனது 2 ஷூக்களையும் சமயோஜிதமாக கழற்றி வைத்திருந்து, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக புஷ் மீது வேகமாக எறிந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். இப்படிச் செய்வதன் மூலம், செருப்பு எதிராளியைத் தாக்கும் probability இரண்டு மடங்காகிறது. அந்த "இரட்டை ஷூ" தாக்குதலிலிருந்து மிக லாவகமாக தப்பித்த ஜார்ஜ் புஷ், அமெரிக்கர்கள் ஏன் தடகள விளையாட்டில் உலகில் தலை சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்ற விசயத்தை நமக்குப் புரிய வைத்தார்! புஷ்ஷின் பாதுகாவலர்களே, அவரது லாவகத்தைக் கண்டு அசந்து போய் விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! புஷ் மீது செருப்பு வீசப்பட்ட அந்த கண்கொள்ளா காட்சியை இங்கு பார்க்கலாம்.
புஷ் இடத்தில், மன்மோகன் சிங்கோ வாஜ்பாயோ இருந்திருந்தால் மேட்டர் விபரீதமாகக் கூட போயிருக்கக் கூடும். அதனால், வயதில் சிறியவர் தான் பிரதமராகவோ, அதிபராகவோ இருக்க வேண்டும் என்று கூறவில்லை. Alert-ஆக இருத்தல் வேண்டும். எண்பது வயதைத் தாண்டி விட்டாலும், அத்வானிஜி அலர்ட்டாகத் தான் இருக்கிறார் என்பது என் கருத்து. (இந்துத்துவா முத்திரை குத்த நினைப்பவர்களுக்கு, இது சரியான வாய்ப்பு:) )
சக பதிவர்களை அவமானப்படுத்த நினைக்கும் "முற்போக்கு" அறிவுஜீவிப் பதிவர்கள், "இத்தகைய 'அழுகிய' மனப்பான்மை கொண்டவரை மலம் தோய்ந்த செருப்பால் அடிக்க வேண்டும்" என்று ஆரோக்கியமாக எழுதும் பழக்கம், தமிழ் இணையத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது! செருப்பு போட்டு நடக்கும்போது, மலத்தை மிதித்து விட்டாலே, அருவருப்பாக உணரும் நாம், செருப்பை "அதில்" தோய்த்து அடிக்கப்படுவதாக எண்ணும்போது, எப்படி உணர்வோம்? அதாவது, செருப்புடன் மலம் கலக்கும்போது, அவமானத்தின் வீரியம் அதிகமாகிறது! அது போல "நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும்" என்றும் எழுதும் வழக்கமும் தமிழ் வலையுலகில் விரவி இருந்தது! இப்போதே துர்நாற்றம் அதிகமாக வீசுவதால், இந்த மேட்டரைத் தொடர விருப்பமில்லை :)
செருப்பு அதிகம் புழங்காத காலத்தில், 'நீ என் கால் தூசுக்குப் பெற மாட்டே' என்ற உபயோகம் பரவலாகக் காணப்பட்டது!
புஷ்ஷுக்கு அடுத்தபடியாக, சமீபத்தில், இங்கிலாந்து சென்ற சீனப்பிரதமருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செருப்பு "மரியாதை" செய்யப்பட்டது, "க்யான் சூன் பூங் சியாங்" என்று புரியாத சீன மொழியில் உரையாற்ற அவரையெல்லாம் உலகப் பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ்ஜுக்குள் யார் விட்டார்கள் என்பது வேறு விஷயம்! அது போல, சமீபத்தில் சுவீடன் சென்ற இஸ்ரேலியத் தூதர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது, இரு "பாலஸ்தீனிய ஆதரவு" மாணவர்கள் அவர் மீது ஷூ வீசினர். அது அவர் வயிற்றில் பட்டு, அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன ;-)
இன்று, (சீக்கியர்களுக்கு எதிரான 1984-ஆம் ஆண்டு வன்முறைக்குக் காரணமாக உலகமே நம்பும்) ஜகதீஷ் டைட்லரை குற்றமற்றவர் என்று CBI கூறியிருப்பது குறித்து தனக்கு மகிழ்ச்சி என்று பேசிய ப.சிதம்பரத்தின் மீது கடுங்கோபம் கொண்ட ஜர்னைல் சிங் என்கிற சீக்கியப் பத்திரிகையாளர் ஒருவர், அவர் மீது செருப்பை வீசியிருக்கிறார்! ஜர்னைல் Line & Length மீது அக்கறையின்றி UNDERARM வீச்சைப் பயன்படுத்தியதால், வீச்சில் வேகமும் இல்லை, குறியும் தப்பி விட்டது என்றும், வீச்சிலிருந்து தப்பியதில் ப.சிதம்பரத்தின் லாவகத்திற்கு எந்தப் பங்கும் கிடையாது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராக்கிய நிருபர் போல, ஜர்னைல் தனது 2வது ஷூவையும் பயன்படுத்தாமல் விட்டது தமிழகத்தில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் :)
ஜர்னைல் ஒரு ஷூ வீசியதற்கே, அவருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 4 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பை ஜர்னைல் இழந்து விட்டதி எண்ணி வருத்தமாக உள்ளது ;-) இனிமேல், பிரஸ் கூட்டங்களில் பத்திரிகையாளர்கள் வெறுங்காலோடு தான் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சந்தேகிக்கிறேன்...
விக்கிபீடியாவில் ஷு டாஸிங் (Shoe tossing) என்பது குறித்து இங்கு வாசிக்கவும். வாசிக்க சுவாரசியமான தகவல்கள் உள்ளன.
பிற்சேர்க்கை: பத்ரி தனது இந்த இடுகையில் ஏதோ ஒன்றை (தங்கள் கோமணம், ஜட்டி உட்பட!) எரித்து (அல்லது கறுப்புக்கொடி காண்பித்து) தங்கள் கோபத்தை / எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தை பிரத்யேகமாக ஒதுக்கி அதற்கு அனுமதி அளித்து விடலாம் என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.
அதன் எக்ஸ்டென்ஷனாக, இது போல ஷூ எறிபவர்களுக்கும் தனியான விசாலமான இடத்தை ஒதுக்கி விட்டதால் நல்லது. யாருக்கும் அடிபடும் அபாயமில்லை. அவர்களும் ஃபிரிஸ்பி போல செருப்பை வீசி விளையாடலாம். நல்ல உடற்பயிற்சி! தூக்கி எறிந்த செருப்பை திரும்ப எடுத்து வந்து தர நாய்களையும் கூட்டிச் சென்றால் நல்லது!
எ.அ.பாலா